அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 20 மே, 2010

தமிழ்நாடு மகளிர் ஆணையம்


தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கு.மா.இராமாத்தாள் அவர்களுடனான நேர்காணல்)
தமிழ்நாடு மகளிர் ஆணையம் எப்போது, எந்த நோக்கத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டது?
இந்த ஆணையம் 1993இல் ஏற்படுத்தப்பட்டது. நான் பதவியேற்று ஓராண்டாகிறது. பெண்களின் பாதுகாப்புக்கு வகை செய்கின்ற விதத்தில் 33 சட்டங்கள் உள்ளன. இந்த பாதுகாப்புச் சட்டங்களைப் பற்றி பெண்களுக்குத் தெரியப்படுத்துவது, அச்சட்டங்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துவது, அதற்கான சட்ட உதவிகளைப் பெற வழிகாட்டுவது ஆகியன இவ்வாணையத்தின் முக்கியமான நோக்கங்கள். இதனை மையமாகக் கொண்டு எங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.
இப்போழுது இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் என்னவாக இருக்கின்றன?
இதற்கு முன் மூன்று ஆண்டுகள் இந்த ஆணையம் முடக்கிவைக்கப்பட்டிருந்தது எல்லோருக்கும் தெரியும். நான் பதவியேற்ற பிறகு ஆணையத்தின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறேன். சுற்றுச்சூழல் துறை, சுகாதாரத்துறை, காவல்துறை போன்ற பிற துறைகளின் ஒத்துழைப்புடன் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த இருக்கிறோம். மல்லிகா அக்காவிடம் கேளுங்கள் என்ற சட்ட விழிப்புணர்வு நூல், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 என்ற சிறு கையேடு ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறோம். அதோடு இதனை 18 மாவட்டங்களில் கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியிருக்கிறோம். இதற்குப் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறோம்.
பெண்களுக்கான சட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லுகின்ற அதே நேரத்தில், அவர்களுக்கெதிரான சமூக அடக்குமுறைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும், அவற்றைத் தடுப்பதற்கும் என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறீர்கள்?
வந்தபின் பரிதவிப்பதை விட, வரும்முன் காத்துக் கொள்வது சிறப்பல்லவா! அந்த அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளில் கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக சென்னையில் கல்லூரி மாணவர்களை (ஆண், பெண் இருபாலரையும்) ஒருங்கிணைத்து கருத்தரங்கு ஒன்றினை நடத்தினோம். இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதே போன்ற கருத்தரங்குகளை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கல்லூரிகளிலும் நடத்த இருக்கிறோம். பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க அனைத்து நிறுவனங்களிலும் புகார் குழு ஒன்று உருவாக்க அறிவுறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் நியமிக்கப்படுவார். உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாக இருப்பார்கள். இவர்களுடன், அமைப்புசாரா தொண்டு நிறுவனமோ அல்லது என்.ஜி.ஓ. வோ சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நாம் என்னதான் சட்டப் பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் வராமல் முழுமையான பெண்கள் முன்னேற்றம், விடுதலை என்பது கடினமாகத்தான் இருக்கும்.
இந்த ஆணையத்தின் அதிகாரங்கள் எவை?
எங்களுக்கு இதுவரையிலும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைத் தமிழக அரசு அளிக்கவில்லை. ஆனால் ஆணையத்தின் தலைவருக்கென்று வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்கள் உள்ளன. அதாவது யாராவது மனு கொடுத்தார்கள் என்றால், எதிர் மனுதாரருக்குச் சம்மன் அனுப்பி, அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், உரிய துறைகளுக்கு மனுவை அனுப்பி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்யவும் அதிகாரம் உண்டு. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களில் அவர்களுக்கு பாதகமான அம்சங்கள் ஏதேனும் இருக்குமானால் அதில் திருத்தங்கள் செய்யும்படி பரிந்துரைக்கவும் இவ்வாணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்தப் பிரச்சினைக்கு அதிகாரப்பூர்வமான தண்டனையோ, தீர்ப்போ சொல்லுகின்ற அதிகாரம் எங்களுக்கு இல்லை. வரையறைகளுக்குள் அடங்கிய அதிகாரங்களாகவேதான் இருக்கின்றன.
பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு, எந்த நிலையில் இவ்வாணையத்தை அணுகலாம்?
ஆரம்ப நிலையிலேயே எங்கள் ஆணையத்தை அணுகலாம். பிரச்சினை வரக்கூடும் என்ற சூழ்நிலையில் முன்கூட்டியே பாதுகாப்பு கருதியும் எங்கள் உதவியை நாடலாம். பெரும்பாலான பெண்கள் புகார் கொடுக்கத் தயங்குகின்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது. காரணம் அதனால் தனக்கு அல்லது தன் குடும்ப வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்துவிடுமோ, தன்னுடைய மாமியாரோ, கணவனோ தன்னைத் தவறாகப் புரிந்துகொள்வார்களோ என்ற அச்சம் பெண்களுக்கு இருக்கிறது. நீ ஒழுங்காக இருந்திருந்தால் இந்த மாதிரியான நிகழ்வு நடந்திருக்குமா என்று பெண்ணின் மீதே குற்றம் சுமத்துகின்ற மோசமான கண்ணோட்டம் மாறுகின்ற வரையில் இந்தத் தயக்கங்கள் நீடிக்கத்தான் செய்யும். வேலை செய்துதான் ஆக வேண்டும் என்ற குடும்பச் சூழல், வேலை உயர்வு தடுக்கப்படும் என்ற உயரதிகாரிகளின் மிரட்டல்கள் பெண்களை வாய்மூடி ஊமைகளாக்கிவிடுகின்றன. இந்நிலை மாறி, தங்களது உரிமைகளை எல்லா இடங்களிலும் நிலைநாட்டுகின்ற துணிச்சலைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களிடம் எந்த மாதிரியான பிரச்சினைகள் அதிகமாக வருகின்றன?
பெரும்பாலும் வரதட்சணை தொடர்பான வழக்குகளே அதிகமாக வருகின்றன. இன்று மட்டும் 20 மனுக்கள் வந்துள்ளன. நீங்கள் உள்ளே வரும்போது, ஒரு குடும்பத்தினர் என் அறையிலிருந்து வெளியே சென்றார்களே, அவர்களுடைய வழக்கு வித்தியாசமானது. பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் முடிந்துவிட்டது. இப்போது பெற்றோர்கள் தங்களுடைய வரதட்சணை பிரச்சினைக்காக வந்திருக்கிறார்கள். மேலும் அதிகம் படித்து, பெரிய பதவிகளில் இருப்பவர்களும் இந்தக் கொடுமைகளைச் செய்வதுதான் அதிர்ச்சியாக உள்ளது. தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப் போல, முதலில் பெண்கள் நகைகள் மீதான மோகத்தை விட்டொழிக்க வேண்டும். உடைகளையும், நகைகளையும் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, உலக நடப்பையும், நாட்டு நடப்பையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதேபோல், இளைஞர்களும், திருமணச் சந்தையில், தாங்கள் விற்பனைப் பொருளாக்கப்படுவதை அவமானமான இழிவான செயல் என்பதை உணர வேண்டும். சுயமரியாதையும், தன்மானமும் உள்ளவர்கள், வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
அடுத்தது, மணவிலக்கு தொடர்பான வழக்குகளும் வருகின்றன. எங்கோ ஒன்றிரண்டு என்றிருந்த நிலைமாறி தொட்டதெற்கெல்லாம் மணவிலக்குக் கோரும் நிலை வந்துவிட்டது. காரணம் நல்ல மனப்பக்குவம் இல்லாதது, வீட்டுப் பெரியவர்களின் வழிகாட்டலின் கீழ் நடக்க விரும்பாத தலைமுறை இடைவெளி போன்றவைதான். கணவன், மனைவி, வீட்டுப் பெரியவர்கள் அனைவருமே விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொண்டால், பிரச்சினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியும்.
அரவானிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அண்மையில் பேசியிருந்தீர்கள், அதைப் பற்றிச் சொல்லுங்களேன்?
அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்ற உண்மையை மறந்து, காரணமே இல்லாமல் அவர்களைத் தள்ளிவைத்து வேடிக்கைப் பொருளாக்கி விட்டோம். வீட்டில் வளர்க்கின்ற ஆடு, மாடு, நாய், பூனை இவற்றைக்கூடப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறவர்கள் இவர்களைக் கண்டால் மட்டும் ஒம்போது என்று கேலி செய்கிறார்கள். இப்படிப் பிறந்தது இவர்களின் தவறல்ல. குரோமோசோம்களின் இணைவில் இயற்கை செய்த தவறு. சமுதாயம் மட்டுமல்ல, சொந்த வீட்டினரே புறக்கணிக்கின்ற இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. பெரும்பாலும் அவர்கள் தங்களைப் பெண்களாக அங்கீகரிப்பதையே விரும்புகிறார்கள். இவர்கள் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற வேண்டுமானால், இவர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளைத் தர வேண்டும். இட ஒதுக்கீடு என்ற முன்னுரிமையால்-சலுகையால் மட்டுமே இது சாத்தியப்படும். இதனை விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட பொது விசாரணைக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அரவானிகள் கலந்து கொண்டனர். தாங்கள் சந்திக்கின்ற இடர்ப்பாடுகளையும் கூறினார்கள். இவர்களின் பிரச்சனைகளை கவனிக்க நான்கு பேர் அடங்கிய புகார் குழுவையும் அமைத்துள்ளோம்.
இவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் உடனே சென்னையில் 28 பேருக்கும், விழுப்புரத்தில் 17 பேருக்கும், மேலும் பலருக்கும் குடும்ப அட்டை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அவருக்கு நேரில் எங்கள் நன்றியைத் தெரிவித்தோம். அடுத்த கட்டமாக இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் கிடைக்கச் செய்யும் முயற்சியில் இருக்கிறோம். அதேபோல், கல்வியில் எங்கே தடைகள் ஏற்படுகிறதோ, அதை எங்களுக்குத் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் பேசித் தடைகளை நீக்கி, கல்வி தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கிறோம். இவர்களுக்கான எங்களின் பணி உறுதியுடன் தொடரும். அரசிடமும் இதற்கான சில பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறோம். தேவைகளை முன்உணர்ந்து மக்கள் நலத் திட்டங்களை தீட்டிவரும் நமது முதல்வர் அவர்கள் அரவானிகளுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதற்காக மகளிர் ஆணையத்தின் சார்பில் முதல்வர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனித உரிமை ஆணையத்தைப் பற்றி பொதுமக்கள் அறிந்துள்ள அளவிற்கு, மகளிர் ஆணையம் குறித்துப் பெண்களே அறிந்திருக்கவில்லையே ஏன்?
இடையில் மூன்று ஆண்டுகள் இந்த ஆணையம் செயல்படவில்லை. பழைய வரவு-செலவு திட்டங்களே செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் பதவியேற்ற பிறகு செயல்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளேன். போதுமான நிதி இல்லாததால், எனது சொந்த முயற்சியில் சமூக அக்கறையுள்ள நண்பர்களின் உதவியுடன் கருத்தரங்குகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறோம். அடுத்தது, சட்டப்பூர்வமான அங்கீகாரமோ, அதிகாரமோ இல்லை. இந்த காரணங்களால், ஆணையத்தின் செயல்பாடுகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக எங்களால் செயல்படுத்த முடியவில்லை. எனவேதான், மகளிர் ஆணையம் பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. வரும் காலங்களில் இந்நிலை மாறும்.
ஆணையத்தின் சிறப்பான செயல்பாட்டிறகு இப்போதுள்ள அதிகாரங்கள் போதுமென்று கருதுகிறீர்களா? கூடுதலான அதிகாரங்களைப் பெற என்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகிறீர்கள்?
இல்லை. இப்போதுள்ள அதிகாரங்கள் போதாது என்பதுதான் உண்மை. கூடுதல் அதிகாரம் பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். சட்ட வடிவ அங்கீகாரம் பெறவதற்கான வரைவு (டிராப்ட்) அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். அரசு தரப்பில் கேட்கப்பட்ட விளக்கங்கள் அனைத்தையும் அளித்திருக்கிறோம். இதற்கான முயற்சி முழுமையான வடிவத்திற்கு வந்துள்ளது. கண்டிப்பாக அரசு, மகளிர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அய்யா பெரியார் வழி வந்த முதல்வர் கலைஞர் அவர்கள்தான் இதற்கு ஒரு விடிவினைத் தரமுடியும் என்று நம்புகிறோம்.
அண்மைக் காலமாக, பெண்கள் மீதான அதிலும் குறிப்பாகப் பள்ளிப் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதைப் பற்றி?
குழந்தைகள் மீதான பெற்றோரின் கவனிப்பு குறைந்து வருகிறது. வேலைக்குப் போகிற பெற்றோர்கள், குழந்தைகளுடன் பொறுமையாக நேரத்தைச் செலவிடுவதில்லை. அவர்கள் தங்களுக்கு நேர்ந்த சிறுசிறு பாலியல் சீண்டல்களைச் சொல்ல வரும்போது காது கொடுத்துக் கேட்பதில்லை. அப்படியே கேட்க நேர்ந்தாலும் குழந்தைகளைத்தான் அதட்டுகிறார்கள். ஆரம்பத்திலேயே அதில் கவனம் செலுத்தியிருந்தால் பெரிய அளவில் விபரீதங்கள் நடக்காமல் தடுக்க முடிந்திருக்கும், மேலும், எந்தக் குழந்தையாக இருந்தாலும், உடற்கூறுகளைப் பற்றி அவர்களிடம் பெற்றோர்கள் பக்குவமாகப் பேச வேண்டும். உங்கள் உடல்மீது ஆதிக்கம் செலுத்துகின்ற உரிமை யாருக்கும் கிடையாது என்ற துணிவான புரிதலை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். நல்ல தொடுதல் எது, தவறான தொடுதல் எது என்பதனைப் பெண்பிள்ளைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். அப்போதுதான் அவர்கள் தற்காத்துக் கொள்ள முடியும். அனைத்துக்கும் மேலாகத் தந்தை பெரியார் அவர்கள் கூறியதைப் போல, பெண்பிள்ளைகளுக்கு, தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குற்றங்கள் குறைந்து, குறையில்லாத சமுதாயம் மலரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக