அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மொத்தம் ஐந்து முறை  அகழாய்வுகள் நடந்தன. 1862-63ல் ஏ.இ.கன்னிங்ஹாம் நடத்தியது முதல் ஆய்வு; 1889-91ல் ஏ.ப்யூரர் நடத்தியது இரண்டாவது; 1969-70ல் பேரா.ஏ.கே. நரேன் நடத்தியது மூன்றாவது; 1975-76ல் பேரா.பி.பி.லால் நடத்தியது நான்காவது; 2003ல் இந்தியத் தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ.,) நடத்தியது ஐந்தாவது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவின் படி, அயோத்தியில்   2003ல் ஏ.எஸ்.ஐ., அகழாய்வு நடத்தியது. இந்த அகழாய்வில், 29 இஸ்லாமியர்கள் உட்பட மொத்தம் 131 பேர் அடங்கிய தொழிலாளர் குழு ஈடுபடுத்தப்பட்டது. மே மாதம் 22ம் தேதி முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை நடந்த அகழாய்வின் முடிவுகள் தொடர்பான இடைக்கால அறிக்கை ஒன்றை,  ஜூன்  11ம் தேதியும், இறுதி முடிவுகளை  574 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக, ஆகஸ்ட் மாதத்திலும், லக்னோவில் உள்ள அலகாபாத் ஐகோர்ட் கிளையில், ஏ.எஸ்.ஐ., தாக்கல் செய்தது.அந்த முடிவுகளில்  குறிப்பிடத் தகுந்தவை: 1. கி.மு.,100-கி.மு., 300: முதலாவதாக, அகழாய்வில், சில பொருட்கள் கிடைத்ததை வைத்து, அயோத்தியில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது இப்பகுதியில் கி.மு.,100ல் இருந்து கி.மு.,300 காலகட்டம் வரையில், வடமாநிலங்களில் பரவியிருந்த கலாச்சாரம் இங்கும் இருந்தது என்பது தெரிகிறது. இக்கலாச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு நிறத்திலான வழவழப்பான பீங்கான் போன்ற மட்பாண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தது, அசோகர் காலத்து "பிராமி' எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரம். மேலும், அதே காலத்தைச் சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் தெய்வச் சிலைகள், மணிகள், சக்கரங்கள், கண்ணாடித் துண்டுகள் ஆகியவையும் அவற்றில் அடங்கும். 2. சுங்க வம்சத்து அரசர்கள் காலம் கி.மு., 200:  இக்காலத்தைச் சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட தாய்த் தெய்வச் சிலைகள், மனித மற்றும் விலங்கு உருவங்கள், மணிகள், கொண்டை ஊசிகள், கருப்பு, சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் அமைந்த மட்பாண்டங்கள், கற்கள் மற்றும் செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 3.  குஷானர் காலம் கி.பி.,100-300:  இக்காலத்தைச் சேர்ந்த சுடுமண் மனித மற்றும் விலங்கு பாவைகள், மணிகள், வளையல் துண்டுகள் கண்டு எடுக்கப்பட்டன. 4.  குப்தர்கள் காலம் கி.பி., 400-600 மற்றும் அதற்குப் பிந்தைய காலகட்டம்:  இக்காலத்திய சுடுமண் சிற்பங்கள், "ஸ்ரீசந்திர' என்று பொறிக்கப்பட்ட செப்புக் காசு, மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கிழக்குப் பகுதிச் சுவரில் நுழைவாயில், வடபுறச் சுவரில் அபிஷேக நீர் வெளியேறுவதற்கான, "ப்ரணாலம்' என்ற பகுதி ஆகியவற்றுடன் கூடிய  வட்டவடிவமான ஒரு கட்டடம்(கோவில்)  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5.  கி.பி., 11 மற்றும் 12ம் நூற்றாண்டுகள் :  இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய மண்டபம் போன்ற பகுதி கண்டறியப்பட்டது. இது, வடக்குத் தெற்காகவும் கிழக்கு மேற்காகவும், 50 மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ளது. மூன்று பெரும் பகுதிகளாக அமைந்துள்ள இம்மண்டபத்தில், 50 தூண்கள் இருந்ததற்கான, 50 அடிப்பகுதிகள் கிடைத்துள்ளன.
கடந்த 2003, ஜனவரியில் கனடா நாட்டைச் சேர்ந்த நிலவியல் அறிஞர் கிளவுட் ரோபில்லார்ட் என்பவர், இப்பகுதியை ரேடார் அலைகள் மூலம் ஆய்வு செய்த பின்,"இந்த மசூதிக்கு அடிப்புறத்தில் சில கட்டடப் பகுதிகள் உள்ளன. இக்கட்டடப் பகுதிகளில் உள்ள தூண்கள், அஸ்திவாரச் சுவர்கள், செங்கல் பாவிய தரைகள், ஆகியவை, ஒரே காலத்தில் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த கட்டடமாக இருக்க வேண்டும். ஆயினும், அவற்றைத் தோண்டிப் பார்க்காமல் இன்ன கட்டடம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது' என்று கூறினார்.

அயோத்தி தொல்லியல் முடிவுகள் :

1. மசூதியின் கீழ் கண்டறியப்பட்ட செங்கற் சுவர்கள் கிழக்கு மேற்காகவும், வடக்குத் தெற்காகவும் அமைந்துள்ளன. ஒரு சுவரின் மேல் இன்னொரு சுவர் உள்ளது. குறைந்தபட்சம் மூன்று தரைகள் தென்படுகின்றன.

2. தரைகள், வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும், வண்ணங்கள் பொருந்தியதாகவும் உள்ளன.

3. அதிக எண்ணிக்கையிலான தூண்களின் அடிப்புறங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, உடைந்த நிலையில் கிடைத்த 1.64 மீ., உயரம் கொண்ட ஒரு கருங்கல் தூண், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந் ததாக உள்ளது. அதன் நான்கு புறமும் "யட்சர்' எனப்படும் தெய்வத்தின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

4. ஒரே அளவிலான 30 தூண்களின் அடிப்புறங்கள் கிடைத்துள்ளன. தூண்கள் இரண்டு வரிசையாக அடுத்தடுத்து இணையாக அமைக்கப்பட்டுள்ளன.

5.  ஒரு படிக்கட்டும் கண்டறியப்பட்டுள்ளது. அலங்கார வேலைப்பாடு கொண்ட இரண்டு தூண்களில், புடைப்புச் சிற்ப நிலையில்  தாமரை மலர் மீது ஓர் உருவம் அமர்ந்திருக்கிறது. அதன் அருகில் தோகை விரிந்த நிலையில் ஒரு மயில் காணப்படுகிறது.

6.  உடைந்த நிலையில் கிடைத்த கருங்கல்  துண்டுகளில், இந்து மதத்தின் சின்னங்களான தாமரை, கவுஸ்துப மணி (விஷ்ணுவின் மார்பில் இருப்பது), முதலை ஆகியவற்றின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வேலைப்பாடமைந்த இக்கற்கள், சுவர்களில் ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்தன.

7.  ஒரு கருங்கல் பலகையின் ஒரு பகுதி, 20 அடி ஆழத்தில் எடுக்கப்பட்டது. அதன் மிச்சப் பகுதி, அதற்கும் அடியில் இருந்த செங்கற்சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. வெளியில் எடுக்கப்பட்ட பலகையில் தேவநாகரி எழுத்தில் ஐந்து எழுத்துக்கள் கொண்ட ஓர் இந்துப் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

8.  20 அடி ஆழத்தில் எடுக்கப்பட்ட பொருட்களின் காலம் 1,500 ஆண்டுகளுக்கு முந்தையது. தொல்லியல் நிபுணர்களின் கருத்துப்படி, ஒவ்வொரு நூறாண்டுக்கும் மண்ணின் மேல் மற்றொரு மண்படுகை ஒரு அடி உயரத்துக்கு படியும். அதன்படி இக்காலம் கணிக்கப்பட்டுள்ளது.

9. எட்டுமுனைகள் (அஷ்டகோணம்) கொண்ட யாக குண்டம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10. இங்கு எடுக்கப்பட்டுள்ள செங்கற்கள், இரண்டாயிரம் ஆண்டுகளாக வடமாநிலங்களில் புழக்கத்தில் இருந்து வரும் சுண்ணாம்புக் கல் கலந்த, "சுர்க்கி' (சுட்ட செங்கற்களைப் பொடி செய்து  சுண்ணாம்புக் கல் சேர்த்து தேவைப்பட்ட வடிவத்திற்கு வார்ப்பது) வகைச் செங்கற்கள் ஆகும். வட்டம் உட்பட பல்வேறு வடிவங்களில் இந்தச் செங்கற்கள் கிடைத்துள்ளன.

11. இப்பகுதியில் பெரிய கட்டடம் இருந்ததற்கான அடையாளம் இருந்ததே தவிர, பல்வேறு குடியிருப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் இல்லை. ஹரி விஷ்ணு கல்வெட்டு: கடந்த 1992ல் சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்தபோது, சில பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத் தக்கது, 1.10 மீ., நீளமும், 0.56 மீ., அகலமும் கொண்ட, "ஹரி விஷ்ணு' கல்வெட்டு. மொத்தம் 20 வரிகள் உள்ள இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி., 1140 என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில், பலி மற்றும் ராவணனைக் கொன்றவரான விஷ்ணுவுக்கு இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி., 11 மற்றும் 12 வது நூற்றாண்டைச் சேர்ந்த  நாகரி எழுத்து வடிவத்தில், சம்ஸ்கிருத மொழியில் இந்தக் கல்வெட்டு உள்ளது. இதை,  கல்வெட்டறிஞர்களும், சம்ஸ்கிருத அறிஞர்களும் ஆய்வு செய்துள்ளனர். அவர்களில் இந்தியக் கல்வெட்டுக் கழகத்தின் தலைவரான  அஜய் மித்ர சாஸ்திரியும் ஒருவர். அவர் இக்கல்வெட்டுப் பற்றிக் கூறியதாவது: இந்தக் கல்வெட்டு சம்ஸ்கிருதத்தில் மிக உயர்ந்த நடையில் எழுதப்பட்டுள்ளது. இதன் ஒரு சிறிய பகுதி மட்டும் செய்யுளில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோவிலின் சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. இதன் 15 வது வரி, இக்கோவில் கற்களால் (சிலா சம்ஹதி கிரக) அமைக்கப்பட்டதாகவும், தங்கக் கலசத்துடன் (ஹிரண்ய கலச, ஸ்ரீசுந்தரம்) கூடியதாகவும், மற்றக் கோவில்களுடன் ஒப்பிட முடியாத அழகு பொருந்தியதாகவும், முன்பு இருந்த அரசர்களால் (பூர்வைரபியக்ருதம் க்ருதம் ந்ருபாதிபிர்) கட்டப்பட்டதாகவும் கூறுகிறது. "இந்த அற்புதமான (அதி அத்புதம்) கோவில், சாகேத மண்டலத்தில் அமைந்துள்ள கோவில் நகரமான (விபுத் ஆலாய்னி) அயோத்தியில் (19 வது வரியில்), பலி மற்றும் ராவணனைக் கொன்றழித்த இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக