அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 21 ஜூலை, 2011

நீர் தண்ணீராக இருந்தால் மட்டும் போதாது, நன்னீராகவும் இருக்க வேண்டும்

நீரின்றி அமையாது இவ்வுலகம் என்று கூறியது நாம் மதிக்க மறந்துவிட்ட மாபெரும் உண்மையை உணர்த்தவேயாகும். நீர் தண்ணீராக இருந்தால் மட்டும் போதாது, நன்னீராகவும் இருக்க வேண்டும்.இப்பூவுலகின் பரப்பிலே படிந்துள்ள தண்ணீரின் மொத்த அளவில் 97.51 சதவிகிதம் கடல் நீராகும். மீதமுள்ள 3 சதவிகித நல்ல நீரில், 97 சதவிகிதம் வடதுருவம், தென் துருவப் பனிப்பாறைகளாகவும், 2 சதவிகிதம் நிலத்தடி நீராகவும் உள்ளது. மீதமுள்ள 1 சதவிகிதம் மட்டுமே குளம், குட்டைகள், ஏரிகள், ஆறுகள், அணைகள் அனைத்திலும் நிரம்பியுள்ள நீராகும். வருண பகவானின் கருணையால், பொய்க்காமல் பெய்தால்தான் இக்குறைந்த அளவு நீரும் முழுமையாகக் கிடைக்கும்.உலகம் வெப்பமாவதன் வெளிப்பாடாக, காலம் மற்றும் அளவு மாறிவரும் பருவமழையின் வருங்காலத் தாக்கங்களும், நீரின் கொள்ளளவைக் குறைக்க வாய்ப்புள்ளது. இந்த 1 சதவிகித தண்ணீரில், 52 சதவிகிதம் ஏரிகள் மற்றும் அணைகளிலும், 38 சதவிகிதம் மண்ணிலேயும், 8 சதவிகிதம் காற்றிலும் ஈரப்பதமாக உள்ளன. 1 சதவிகிதம் ஆறுகளிலும், 1 சதவிகிதம் உயிர்களின் உடலிலும் உள்ளன.எனவேதான், தண்ணீர் திரவத் தங்கம் என்று வர்ணிக்கப்படுகிறது. பெருகிவரும் மக்கள்தொகையும், அதிவேக நாகரிக வளர்ச்சியும், காசுநோயும் அன்றாட வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள தண்ணீரை வேகமாக மாசுபடுத்தி வருகிறது. இது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.இதன் விளைவு, ஐக்கிய நாடுகள் சபையின் "மக்களுக்குத் தண்ணீர், வாழ்வுக்குத் தண்ணீர்' என்ற உலக நீர் மேலாண்மை பற்றிய ஆய்வறிக்கையில் மிக மோசமான, அசுத்த நீர் அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியா உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.உலகத்தில் மற்றைய நாடுகளை ஒப்பிடுகையில், ஆசியாவில் உள்ள நதிகள் மிக அசுத்தமானதாகவும், நீரில் மூன்று மடங்கு அதிக அளவில் மனித மலத்தில் உள்ள பாக்டீரியா கலந்துள்ளது என்பதும், இருபது மடங்கு அதிக அளவு ஈயம் கரைந்துள்ளது என்ற விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.இருபதாம் நூற்றாண்டில், உலகில் மக்கள்தொகை மூன்று மடங்காக அதிகரிக்கும்போது, நீரின் பயன்பாடு ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.இந்த நூற்றாண்டின் சரி பகுதி கால அளவில், 60 நாடுகளில் உள்ள 700 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாமென்ற கணிப்பும் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, ஒவ்வொரு சொட்டு நீரையும், ஒவ்வொரு பருக்கு மண்ணையும், ஒவ்வொரு சூரியக் கதிரையும் ஒன்றிணைத்துச் சீரிய முறையில் செம்மையாகப் பயன்படுத்தினால்தான், நமது நாட்டின் வருங்காலச் சந்ததிகளுக்கு நலமான, வளமான, மகிழ்வான வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் அந்தப் புனிதச் செயலை நிகழ்த்த இயலும்.மனித வாழ்வுக்கு இன்றியமையாத குடிநீர், தமிழகத்தில் எந்த அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதைக் கீழ்க்கண்ட விவரங்கள் வெளிக்கொணர்கின்றன.தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டில், அரசு நீர் பரிசோதனை ஆய்வாளர்களால், எவ்வளவு சதவிகிதம் குடிநீர், குடிக்கவே லாயக்கற்றது என்று கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: மனித மலத்தில் உள்ள எஸ்கர்கியா கோலை என்ற பாக்டீரியா, அவற்றுடன் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்ற நோய்களை உண்டாக்கும் ஜியார்டியா, அமீபா போன்ற கிருமிகளும் கலந்துள்ள உண்மைகளும் தெரிய வருகிறது.குடிநீராக, நகர்ப்புறங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் மாநகராட்சிகளில் 6 சதவிகிதம், அரசு நிறுவனங்களில் 17 சதவிகிதம், நகராட்சிகளில் 26 சதவிகிதம், நகரப் பஞ்சாயத்துகளில் 31 சதவிகிதம், அரசு மருத்துவமனைகளில் 48 சதவிகிதம், ரயில் நிலையங்களில் 66 சதவிகிதம் குடிக்கவே லாயக்கற்றது - மோசம் என்ற முத்திரையைப் பெற்றுள்ளது வருந்த வேண்டிய விவரங்களாகும்.கிராமப்புறங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரிலும், 63.79 சதவிகிதம், குடிக்க லாயக்கற்றது என்ற வேதனையை, பரிசோதனைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.நகரங்களைவிட கிராமப் பகுதிகளில், நீரின் மாசு அதிகமாக உள்ளதையும், நகரப் பகுதிகளில், மாநகராட்சிகளில் குறைவாகவும், பிறகு படிப்படியாக நகராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் மக்கள் கூடும் பொதுஇடங்களான அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்களில் அதிகரித்து வருவதையும், அதன் காரணங்களையும் கவனமாகப் பரிசீலித்து, அக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.2009-ம் ஆண்டு மேற்கொண்ட குடிநீர் ஆய்விலும், இதேபோன்ற குறைகள், கிட்டத்தட்ட இதே விகிதாசாரத்தில் உள்ளதையும், ஆய்வுப் புள்ளிவிவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.இதுபோன்ற மாசுபட்ட குடிநீரைக் குடிப்பதால் எவ்வகையில் மக்களின் உடல்நலம் பாதித்திருக்கும் என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளும் உந்துதலில், மாவட்ட வாரியாக, ஆண்டு முழுவதும், தண்ணீர் மூலம் பரவும் நோய்களான வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்களால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, சுகாதார மையங்கள், மருத்துவமனைகளின் பதிவுகளின் மூலம் கண்டறியப்பட்டது. மாவட்ட வாரியான நோய்ப் பட்டியலில் அதிகமாக 2006 முதல் 2009 வரையான நான்கு ஆண்டுகளில், கடலூரில் 8,000 பேரும், மதுரையில் 7,153 பேரும், திருவள்ளூரில் 6,126 பேரும் நீரில் பரவும் நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையை நாடியது தெரிய வந்துள்ளது.தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் சேர்த்து நான்கு ஆண்டின் சராசரியாக 62,886 நபர்கள் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதங்களில், மே, ஜூன், ஜூலையில்தான் மிக அதிகமான நோய்த்தாக்கமாக, சராசரி மாதம் 5,000 என்பதும், 2009-ம் ஆண்டு மிக அதிகமாக 88,746 நபர்கள் பாதிப்புக்குள்ளானதும் தெரிகிறது.கோடைக்காலத்தில் நீர் அளவு வெகுவாகக் குறைவதால், கிருமிகளின் தாக்கம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த, அந்த மாதங்களில் சிறப்புத் தணிக்கைகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.குடிநீரில், சாக்கடை நீர் கலப்பதைச் சுலபமான முறையில் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சாக்கடைகள், வீதிகளின் அகல விளிம்புகளில் நீளவாக்கில் அமைந்துள்ளன. வீட்டுக்கு விநியோகிக்கும் குடிநீர்க் குழாய்களோ, சாக்கடையைத் தாண்டி, எதிர்ப்புறத்தில் உள்ளே செல்கின்றன.இந்தச் சந்திப்புகளில், குழாய்களில் விரிசல், கசிவு காரணமாக சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளது. குடிநீரும், வடிகாலும் ஒன்றாகிவிடும். இதைக் கண்டறிய, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடிநீர்க் குழாய்களில் நீரைக் கீழ்க்கண்டவாறு சோதிக்கலாம்.ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சி ஊக்க திரவத்தில் உறிஞ்சு காகிதத்தை நனைத்து, உலர்த்தி, சுருட்டி, சிறிய 80 மில்லி மீட்டர் அளவேயுள்ள கண்ணாடிக் குப்பியில் அடைத்து, அதில் வீட்டில் உள்ள குடிநீர்க் குழாய்களிலிருந்து சேகரிக்கப்படும் நீரை ஊற்றி மூடி வைத்தால், 24 மணி நேரத்தில், கிருமிகள் உள்ள தண்ணீர் கரும் சிவப்பு நிறமாக மாறும்.மலத்தில் மட்டுமேயுள்ள எஸ்கர்கியா கோலை என்ற நோய் உண்டாக்கும் பாக்டீரியா உள்ளதை இது உறுதிசெய்யும். அந்தக் கிருமி நீரில் கலக்காவிட்டால், நிற மாறுதல் இருக்காது.இதனால் அவ்வாறு நிறம் மாறும் தண்ணீருடைய வீடுகளுக்கு நீர் விநியோகிக்கும் குழாய்களையும், சாக்கடைக் குழாய்களையும் மண்ணைத் தோண்டி பழுதுபார்க்க ஏதுவாகும். வீதியில் உள்ள அனைத்து வீடுளிலும் தண்ணீர் நிறம் மாறினால், வீதிகளுக்கு வழங்கும் முக்கிய குழாய் சந்திப்புகளைச் சரிபார்க்க வேண்டும்.ஹைட்ரஜன் சல்பைடு மூலம் பாக்டீரியா கண்டறியும் இந்த மிகமுக்கிய சோதனைக்கு ஆகும் செலவு ரூ.2 அல்லது 3 மட்டுமே என்பது மகிழ்வான செய்தி. மிக எளிதில் செய்யவல்ல இந்தத் திட்டத்தைச் சுலபமாகக் குறைந்த செலவில், மக்களது ஆதரவுடன் விரைவில் செயல்படுத்தினால், வரும் ஆண்டுகளில் நோய்களை வெகுவாகக் குறைக்கலாம்.குடிநீர்த் தேவை அன்றாடம் அதிகரித்து வருவதால், விலை நீராக அவை மாற்றப்பட்டு, இல்லாதவர்களுக்கு இல்லாததாக மறுக்கப்படுகிறது.உலகத்தில், எட்டு நபர்களில் ஒருவருக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீரைச் சுத்தப்படுத்தி, கிருமிகளைக் களைய, இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குளோரின் முறையுடன் யு.வி. (அல்ட்ரா வயலெட்) கதிர்களைப் பயன்படுத்தி, மிகச் சிறப்பாகக் குடிநீர்க் கிருமிகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தலாம். அல்ட்ரா வயலெட் கதிர்கள் கிருமிகளின் செல்களுக்குள் ஊடுருவிச் சென்று, டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. போன்ற மரபுக் காரணிகளைச் சிதைத்து, செயலிழக்கவைக்க வல்லவை. எனவே, இது குளோரினால் அழிக்க முடியாத கிருமிகளையும் சிதைத்துவிடும்.தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக, வளரும் நாடுகளில் செலவு குறைவாகவும், எளிமையாகக் கையாளும் வகையிலும், எல்லோராலும் ஏற்கத்தக்க வகையிலும் உள்ள, சூரிய சக்தியால் இயங்கி, நாள் ஒன்றுக்கு 4,000 லிட்டர் தண்ணீரை அல்ட்ரா வயலெட் கதிர் மூலம் நன்நீராக்கும் புதிய கருவிகள் தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவைகளை பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டடங்களின் மேல் பொருத்திக் குறைந்த செலவில் இயக்கலாம்.அதுபோன்றே, "லைப் ஸ்டிரா' என்ற ஓர் அடி நீளமும். ஊதுகுழாய் பருமனுமே உள்ள கிருமி வடிகட்டி ஒன்று குறைந்த விலையில் (6 டாலர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உறிஞ்சி நீர் குடித்தால், அசுத்த நீரில் உள்ள கிருமிகளை 99.9 சதவிகிதம் நீக்கும்.இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தவல்ல இக்கருவி, பள்ளிக் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு, வளரும் நாடுகளில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தண்ணீரை நன்னீராக்கிக் கண்ணீரைத் துடைத்திடும் கருணைச் செயலை விரைவில் நிறைவேற்றத் தமிழக அரசு முனைந்திருப்பது ஒரு திருப்புமுனையாகத் திகழ்ந்து, நலமும், வளமும், மகிழ்வும் தமிழக இல்லங்களில் பரிமளிக்கச் செய்ய வல்ல நல்ல நிகழ்வாகட்டும்! 

அன்புடன் 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
பந்தலூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக